அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கூறி அ.தி.மு.க. ஆட்சி தொடர அனைவரும் பாடுபட வேண்டும் - இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேச்சு

அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கூறி தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி தொடர அனைவரும் பாடுபட வேண்டும் என்று இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பரமசிவம் எம்.எல்.ஏ. கூறினார்.
அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கூறி அ.தி.மு.க. ஆட்சி தொடர அனைவரும் பாடுபட வேண்டும் - இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேச்சு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பாசறை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினர்.

இதில் பாசறை செயலாளர் பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

நான் மறைந்தாலும் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. நிலைத்து இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டவர் ஜெயலலிதா. அவரை பின்பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.

அ.தி.மு.க. அரசின் திட்டங்களை அறிந்து இளைஞர்களாகிய நீங்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். இளைஞர்கள் சமூகத்தில் தங்கள் சேவையை நிலைப்படுத்த ஒரு களம் தேவை. அது அ.தி.மு.க.வாக தான் இருக்க முடியும். நமது பிறப்பு சாதாரணமாக இருந்து விட கூடாது, வரலாறாக இருக்க வேண்டும். அடிப்படை தொண்டனையும் அமைச்சர் உள்ளிட்ட நல்ல பொறுப்புகளை அளித்து அழகு பார்க்கும் கட்சியும் அ.தி.மு.க. தான். நீங்களுக்கு சில ஆண்டுகளில் கட்சியில் நல்ல பொறுப்பிற்கு வரலாம்.

தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடக்கிறது. பொது பிரச்சினை ஏதாவது வந்தால் ஸ்டாலின் வெறும் அறிக்கையை மட்டுமே வெளியிடுவார். அறிக்கையும், துரைமுருகனும் இல்லாவிட்டால் ஸ்டாலின் கிடையாது. ஜெயலலிதா ஆட்சியில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு என பல திட்டங்களை கொண்டு வந்தார். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழை மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வழி வகுத்தவர் எம்.ஜி.ஆர். அதேபோல் தாலிக்கு தங்கம் திட்டத்தை கொண்டு வந்து பெண் கல்வியை ஊக்குவித்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி, இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் வேலையில்லை என யாரும் சொல்ல முடியாத அளவிற்கு ஆட்சி செய்து வருகிறார்.

அ.தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு நேரிடையாக சென்று எடுத்து கூறி தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெயசுதா, அரங்கநாதன், மாவட்ட பேரவை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன், நகர செயலாளர் ஜெ.செல்வம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.அன்பரசு, அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணிச் செயலாளர்கள் சுனில்குமார், தொப்பளான், கலைப் பிரிவு மாவட்ட தலைவர் பழனி, ஒன்றிய செயலாளர்கள் தேவராஜன், ஜெயபிரகாஷ், பாஷ்யம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் ஜானகிராமன், கோவிந்தராஜ், தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தென்மாத்தூர் கலியபெருமாள், சரஸ்வதி வித்யாலயா பள்ளி தாளாளர் முனைவர் பருவதம் மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com