இளைஞர்களின் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிப்பதே அரசின்கொள்கை; மாநில வளர்ச்சி திட்டக்குழு துணைத் தலைவர் பொன்னையன் பேட்டி

இளைஞர்களின் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிப்பதே அரசின் கொள்கை என்று மாநில வளர்ச்சி திட்டக்குழு துணைத்தலைவர் பொன்னையன் கூறினார்.
மாநில வளர்ச்சி திட்டக்குழு துணைத் தலைவர் பொன்னையன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது
மாநில வளர்ச்சி திட்டக்குழு துணைத் தலைவர் பொன்னையன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது
Published on

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாநில வளர்ச்சி திட்டக்குழு சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாநில வளர்ச்சி திட்டக்குழு துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தலைமை தாங்கினார். கூடுதல் இயக்குனர் சஞ்ஜீவனா முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி வரவேற்றார்.

இதில் பயிற்சி கலெக்டர் அமீத்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நரிகுறவர்களுக்காக கட்டுப்பட்டு வரும் கடைகளை திட்டக்குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் பராமரிப்பு மையத்தை பொன்னையன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுயவேலைவாய்ப்பை ஊக்குவிப்பது

மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை அரசு நடைமுறைக்கு கொண்டு வருகிறது. திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுகிறதா, போதிய நிதி ஒதுக்கப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறு, குறு தொழில்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க முன்வந்து உள்ளது. படித்து வேலை கிடைக்காமல் இருப்பவர்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள புதிய பொருட்களை கண்டறிய வேண்டும். அரசாங்கத்தால் அனைவருக்கும் வேலை கொடுக்க முடியாது. அதனால் அவர்கள் சொந்த காலில் நிற்க சுயஉதவிக்குழுக்களை அதிகளவில் உருவாக்கி, பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.

உலகிலேயே அதிகளவில் என்ஜீனியரிங் கல்லூரி தமிழகத்தில்தான் உள்ளது. படித்த இளைஞர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். சுய வேலை வாய்ப்புக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். சுய உதவிக் குழுவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் போவதால் கட்டாயமாக விற்பனையாகக் கூடிய பொருட்களை உற்பத்தி செய்து கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களின் சுயவேலை வாய்ப்பை ஊக்குவிப்பதே அரசின் கொள்கையாகும். அதற்கு மாநில வளர்ச்சி திட்டக்குழு உறுதுணையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கமல், ரஜினி இணைந்தால் பாதிப்பில்லை

மேலும் அவர் கூறுகையில் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிக்கும்போது ஏழை, எளிய மக்களுக்காக பாடுபடுவோம் என்ற கருத்துகளை பாடல்கள், வசனங்கள் மூலம் தெரிவித்தார். அண்ணாவின் கொள்கையை பரப்புவதில் கொள்ளை பரப்பு பீரங்கியாகவே எம்.ஜி.ஆர். இருந்தார். அந்த அடிப்படையில் அவர் அரசியலுக்கு வந்தார். அது வேறு. ரஜினியின் அரசியல் வேறு. அவர் எந்த கணிப்பில் செய்கிறார் என்பது அவருக்கு தான் தெரியும். கமல், ரஜினி இணைந்தால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பு ஏற்படாது. தமிழகம் திராவிட கலாசாரம் உள்ள பூமி. பெரியார், அண்ணாவில் இருந்து தற்போது உள்ள திராவிட கட்சிகளின் தலைவர்கள் வரை இந்த உணர்வு வளர்ந்து உள்ளது. தமிழ் மொழி என்றைக்கும் வட மொழியின் தாக்குதலை ஏற்காது. தமிழ் பூமிக்கு ஏற்ற அரசியல் தான் ஒளிருமே தவிர மற்ற அரசியல் இங்கு வருவது மிகவும் சிரமம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com