ஆயக்காரன்புலத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வாக்குறுதி

வேதாரண்யம் தொகுதியில் நான் மீண்டும் வெற்றி பெற்றால் ஆயக்காரன்புலத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆயக்காரன்புலத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வாக்குறுதி
Published on

வாய்மேடு,

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆயக்காரன்புலம், நாலுவேதபதி உள்ளிட்ட கிராமங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:- அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி ஒவ்வொரு மாதமும் குடும்பத் தலைவிக்கு ரூ.1,500 வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும். சொந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு அரசு இடம் வாங்கி காங்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

ஆண்டுக்கு 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். மகப்பேறு உதவித்தொகை ரூ.21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். குடும்பத்தலைவியின் கஷ்டங்களை போக்கும் விதத்தில் அம்மா வாஷிங்மிஷன் வழங்கப்படும். விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வைப்பு நிதியை ரூ. 70 ஆயிரமாக உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டாக உயர்த்தப்படும். போலீசாருக்கு சுழற்சிமுறையில் வார விடுமுறை வழங்கப்படும். அம்மா பசுமை வீடு கட்டும் திட்டத்தில் வீட்டுக்கு மானியம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படும். 309 தாலுகாவில் அரசு விவசாயி வங்கி தொடங்கப்படும்.

முதியோர் உதவி தொகை ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். கால்நடை வாரியம் அமைக்கப்படும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும். ஆயக்காரன்புலம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நான் பல கோடி ரூபாயில் பல நலத்திட்டங்களை செய்து உள்ளேன்.

குறிப்பாக நான்கரை கோடி ரூபாய் மதிப்பில் மானங்கொண்டான் ஆற்றில் இரண்டு உயர்மட்ட பாலங்கள், ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் ரூ.30 லட்சம் செலவில் பயணிகள் நிழலகம், ரூ.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலைகள், மேலும் எனது வாழ்நாள் சாதனையாக ஆயக்காரன்புலம் 4-ம் சேத்தியில் வேத ஆயத்த ஆடை பூங்கா 21,000 மகளிர் பயன்பெறும் வகையில் உருவாக்கப்படுகிறது. நான் மீண்டும் வெற்றி பெற்றவுடன் ஆயக்காரன்புலத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும்.

இப்பகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளித்து என்னை வெற்றி பெற செய்து விடுபட்ட பணிகளை செய்து முடிக்க வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்கு சேகரிப்பின் போது ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன் அவை. பாலசுப்பிரமணியன், சவுரிராஜன், மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமையன், ஞானசுந்தரி சுந்தரபாண்டியன் கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com