அரசு திட்டங்கள் கடைக்கோடி மக்களை சென்றடைய தனிக்கவனம்

அரசு திட்டங்கள் கடைக்கோடி மக்களை சென்றடைய தனிக்கவனம் செலுத்தப்படும் என்று தேனி மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற முரளிதரன் தெரிவித்தார்.
அரசு திட்டங்கள் கடைக்கோடி மக்களை சென்றடைய தனிக்கவனம்
Published on

தேனி:

புதிய கலெக்டர் முரளிதரன்

தேனி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில், தமிழ்நாடு வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை இயக்குனராக பணியாற்றிய க.வீ.முரளிதரன் தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, தேனி மாவட்டத்தின் 17-வது கலெக்டராக முரளிதரன் நேற்று மாலை பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தேனி அருமையான மாவட்டம். தமிழக அரசின் திட்டங்கள் கடைகோடியில் உள்ள மக்களின் கரங்களுக்கும் சென்றடைய தனிக்கவனம் செலுத்துவேன். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். அனைத்து அலுவலக நாட்களிலும் என்னை சந்தித்து தங்களின் குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.

மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் நானே சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.

மக்கள் ஒத்துழைப்பு

தற்போது கொரோனா பேரிடர் காலம். இந்த கொடிய வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்த வைரஸ் தொற்றில் இருந்து விரைவில் தேனி மாவட்டம் முழுமையாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அச்சமோ, தயக்கமோ இன்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்துடன் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொறுப்பு ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

கலெக்டர் முரளிதரன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2003-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று ஆர்.டி.ஓ.வாக பணியாற்றினார்.

பல்வேறு துறைகளில் பணியாற்றி பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசன் மேலாண்மை இயக்குனர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். மாவட்ட கலெக்டராக முதல் முறையாக தேனி மாவட்டத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com