அரசின் விதிமுறைகளை பொது மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் - அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.
அரசின் விதிமுறைகளை பொது மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் - அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு
Published on

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். கலெக்டர்கள் ஷில்பா (நெல்லை), அருண் சுந்தர் தயாளன் (தென்காசி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி பேசியதாவது:

முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளார். நாள்தோறும் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகிறார். மேலும் கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆய்வு கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார். அந்த அளவுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பாக பணியாற்றி வருகிறது.

மேலும் பொதுமக்களுக்கு வீட்டில் இருந்தபடியே அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட ஏதுவாக பொதுமக்கள் குடியிருப்பு அருகே காய்கறி, மளிகை பொருட்கள் உரிய விலையில் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு உள்ளது. முதல்அமைச்சர் அறிவித்தபடி ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் உணவு பொருட்கள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 20 பேர்கள் வீதம் பாதுகாப்புடன் வழங்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் கூட்டுறவுத்துறையின் மூலம் நடமாடும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய அம்மா மினி மார்க்கெட் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்கள், வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம். தங்களின் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த பெரியவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை (ராதாபுரம்), ரெட்டியார்பட்டி நாராயணன் (நாங்குநேரி), லட்சுமணன் (நெல்லை), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர், உதவி கலெக்டர்கள் மணிஷ் நாரணவரே (நெல்லை), பிரதிக் தயாள் (சேரன்மாதேவி), மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஓம்பிரகாஷ் மீனா (நெல்லை), சுகுணாசிங் (தென்காசி), நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com