திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை கொரோனாவுக்கு பலி

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு அரசு பள்ளி ஆசிரியை பலியானார். துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட மேலும் 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை கொரோனாவுக்கு பலி
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், திருச்சி காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்பட மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,939 ஆக உயர்ந்தது.

துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர் இருவரும் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஏற்கனவே, கொரோனா தொற்றால் திருச்சி கண்டோன்மெண்ட் மற்றும் ஏர்போர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ள திருச்சி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலகத்தில் அதிகாரி உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி சீராத்தோப்பு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த உறையூர் லிங்கநகர் பகுதியை சேர்ந்த 50 வயது ஆசிரியை கொரோனாவுக்கு பலியானார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்தது. அதேநேரம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 54 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 3,598 பேர், பூரண குணமாகி வீடு திரும்பி இருக்கிறார்கள். 1,274 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

திருச்சி நகரில் கொரோனா பாதித்த பகுதிகள் அதிகரித்து வருகின்றன. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் கோவில் அருகே தெற்கு உள் வீதி நேற்று முன்தினம் அடைக்கப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பு காரணமாக கே.கே.நகர் ராணி அண்ணாதுரை தெரு, ஜே.கே.நகர், ஆர்.எஸ்.புரம், சேஷாத்திரி நகர் ஆகிய பகுதிகள் மாநகராட்சி சார்பில் தடுப்புகள் ஏற்படுத்தி அடைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com