மராத்தா சமூகத்தினர் அரசுக்கு 18-ந் தேதி வரை கெடு

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக மராத்தா சமூகத்தினர் அரசுக்கு 18-ந் தேதி வரை கெடு விதித்துள்ளனர்.
மராத்தா சமூகத்தினர் அரசுக்கு 18-ந் தேதி வரை கெடு
Published on

மும்பை,

மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவது, தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பது, கோபார்டி கற்பழிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மராத்தா சமூகத்தினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மராத்தா கிராந்தி மோர்சா அமைப்பினர் மும்பையில் மாநில வருவாய் மந்திரி சந்திரகாந்த் பாட்டீலை சந்தித்து பேசினர். இது குறித்து மராத்தா கிராந்தி மோர்சா உறுப்பினர் வினோத் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது கோரிக்கைகளை அரசிடம் அமைதியான முறையில் வலியுறுத்தி வருகிறோம். இதற்கு அரசு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரையில் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. எனவே கோரிக்கைகள் குறித்து கடைசியாக ஒருமுறை வலியுறுத்தவே மந்திரியை சந்தித்தோம்.

இந்த கோரிக்கைகள் குறித்து தங்களது நிலைப்பாட்டை வருகிற 18-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு மாநில அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். இதற்கு மேலும் அரசு எங்கள் சமூகத்தின் பொறுமையை சோதித்தால் அமைதி போராட்டம் அமைதியாகவே இருக்கும் என உத்தரவாதம் அளிக்க முடியாது. நாங்கள் அரசுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com