

நெல்லை,
தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களான இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம் மற்றும் பிற உதவித்தொகை திட்டங்களின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை கோரிய மனுக்களை அலுவலகங்களில் நேரடியாக கொடுக்காமல் இணையதளம் வழியாக பொது சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உதவித்தொகைகள் பெறுவதற்கு உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாமல் விண்ணப்பிக்கப்படுவதால், தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை மற்றும் தொடர்புடைய உதவித்தொகைகள் பெறுவதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விண்ணப்பதாரர் குடியிருக்கும் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய அசல் ஆவணங்களை பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு, ஆதரவற்ற 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடைய முதியோர் உரிய ஆவணங்களுடன், வறுமைக்கோட்டு எண் சான்றுடன் விண்ணப்பிக்கலாம். இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதரவற்ற 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய விதவை பெண்கள் உரிய ஆவணங்களுடன் வறுமைக்கோட்டு எண் சான்று மற்றும் கணவரின் இறப்பு சான்று இணைத்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்துக்கு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊனம் நிலை 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் ஆவணங்களுடன், வறுமைக்கோட்டு எண் சான்று மற்றும் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டத்துக்கு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் இருக்கும் நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் அடையாள அட்டையை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டத்தில் விதவை பெண்கள் தகுந்த ஆவணங்களுடன், கணவரின் இறப்பு சான்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஆதரவற்ற 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சட்டப்பூர்வமாக விவாகரத்து அல்லது குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேலாக கணவரால் கைவிடப்பட்டவராகவும் அல்லது கோர்ட்டில் இருந்து சட்டப்பூர்வமாக பிரிவு சான்றிதழ் பெற்று பிரிந்து வாழும் பெண்கள் உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். முதிர்கன்னி ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதரவற்ற 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய திருமணமாகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆதரவற்ற 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நிலமற்ற விவசாய தொழிலாளிகள் தகுந்த ஆவணங்களுடன், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டையுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விவரங்களின்படி, முதியோர் உதவித்தொகைகள் மற்றும் பிற உதவித்தொகைகள் பெற தகுதி உடைய பயனாளிகள் உரிய அசல் ஆவணங்களை பொது சேவை மையம் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.