

புதுச்சேரி,
மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன்ரெட்டி நேற்று பா.ஜ.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புதுச்சேரி வந்தார். அக்கார்டு ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்த அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது புதுவை மாநில வளர்ச்சி, மேம்பாடு தொடர்பான கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை யூனியன் பிரதேசத்திக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று 1987-ம் ஆண்டு முதல் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக புதுவை சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி தொடர்ந்து மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளோம். இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
புதுவை மாநிலத்தில் கடந்த ஆண்டு பட்ஜெட் ரூ.9 ஆயிரம் கோடியாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு மொத்த உற்பத்தி அடிப்படையில் தான் பட்ஜெட் நிறைவேற்றப்படும்.
அதன் அடிப்படையில் பார்த்தால் பட்ஜெட் தொகையை அதிகரிக்க வேண்டும். ஆனால் தற்போது பட்ஜெட் தொகை குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்கு தொகையும் சரியான முறையில் வந்தடைவது இல்லை. எனவே மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இதே நிலை தான் 2019-20 நிதி ஆண்டிலும் தொடர்கிறது. எனவே மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் புதுவைக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
மத்திய அரசு புதுவை மாநிலத்திற்கு உதவித்தொகையை அதிகரித்து தர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தி வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது அந்த தொகையை உயர்த்தி வழங்குவது இல்லை. புதுவையில் சட்டசபை உள்ளது. 15-வது நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும். புதிதாக உருவான ஜம்மு காஷ்மீர் கூட நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது. புதுவையை நிதிக்குழுவில் சேர்க்காததால் வரவு-செலவில் ஆண்டிற்கு ரூ.600 கோடி குறைபாடு ஏற்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டு தொகையான ரூ.632 கோடியே 20 லட்சத்தை வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கிய 7-வது ஊதியக்குழுவின் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். யூனியன் பிரதேசமான டெல்லியில் போலீசாருக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷனை மத்திய அரசு வழங்குவதுபோல், புதுவைக்கும் வழங்க வேண்டும்.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் கிரண்பெடி ஜனநாயக முறையில் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். அவர் தினந்தோறும் அரசின் நிர்வாகம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுகிறார். இதனால் ஜனநாயக முறைக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது. கவர்னர் தலையீட்டின் காரணமாக மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஆகிறது. அவர் நேரடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி நிதியை தடுத்து நிறுத்துகிறார். மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ள திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் தடுக்கிறார்.
எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்க விடாமல் பல்வேறு கேள்விகள் கேட்டு தடுத்து தாமதப் படுத்துகிறார். காவல்துறை, கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை எழுத்தர், முதுநிலை எழுத்தர் போன்ற காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விடாமல் தடுத்தும், தாமதப்படுத்துகிறார்.
மீனவர்கள் ஓய்வூதியத்திற்கு அனுமதி வழங்க மறுக்கிறார். அவரின் செயல்பாட்டால் மத்திய அரசுக்கு தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுகிறது. கவர்னரை புதுவையில் தொடர்ந்து நீடிக்க செய்வது மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை சந்தித்தனர். அப்போது மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.