

புதுச்சேரி,
புதுவையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவர்னர் கிரண்பெடி கவனம் செலுத்தி வருகிறார். அவர் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இதுதொடர்பாக ஆய்வுகளை நடத்தி வருகிறார்.
நேற்று அவர் கிருஷ்ணாநகர், எழில் நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆய்வின்போது மேற்கண்ட நகர்களின் காலிமனைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதை கவர்னர் பார்த்தார். இங்கு தண்ணீர் தேங்குவதால் விஷ பூச்சிகள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் கவர்னரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் தொற்று நோய் ஏற்படுவதாகவும் கூறினர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மனை உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்ப கலெக்டருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கள ஆய்வு நடத்த அந்தந்த துறை அமைச்சர்களுக்கு தகவல்கள் அனுப்புமாறும் கவர்னர் கேட்டுக்கொண்டார்.