

பாகூர்,
புதுவை மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியாக திகழ்வது பாகூர் ஏரி ஆகும். விவசாயத்துக்கு மட்டுமின்றி இந்த ஏரி பறவைகள் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த ஏரி பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் தூர்வார அரசு திட்டமிட்டிருந்தது.
அதன்படி மகேந்திரா இந்தியா நிறுவனம்- அரவிந்தர் சொசைட்டி இணைந்து ரூ.9 லட்சம் செலவில் தூர்வாருவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பணியை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார். அங்கிருந்த கிரேனை இயக்கி பார்வையிட்டார்.
நடைபயணம்
அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி அனைத்து அதிகாரிகளையும் அழைத்து பொதுமக்களுடன் உலக நீர் தினத்தில் அதன் அவசியம் குறித்து பாகூர் ஏரியில் நடை பயணம் செய்வது என அறிவித்தார். பாகூர் ஏரியை உருவாக்கியதாக கூறப்படும் பண்டைய கால நடன மங்கைகள் சிங்காரி, பங்காரி சிலைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். இந்தநிகழ்ச்சியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், உதவி பொறியாளர் சிவபாலன், பங்காரு வாய்க்கால் கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர், பாகூர் ஏரி சங்க நிர்வாகிகள் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.