சட்டமன்றம் இல்லாத புதுவையை உருவாக்க கவர்னர் முயற்சி - அமைச்சர் கந்தசாமி குற்றச்சாட்டு

சட்டமன்றம் இல்லாத புதுவை யூனியன் பிரதேசத்தை உருவாக்க கவர்னர் கிரண்பெடி முயற்சிப்பதாக அமைச்சர் கந்தசாமி குற்றஞ்சாட்டினார்.
சட்டமன்றம் இல்லாத புதுவையை உருவாக்க கவர்னர் முயற்சி - அமைச்சர் கந்தசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

மாற்று திறனாளிகள் குறித்த அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதாக நவீன அடையாள அட்டை சுகாதாரத்துறை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த 107 பேருக்கு இந்த தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை வழங்கும் நிகழ்ச்சி வாழைக்குளம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சமூக நலத்துறை இயக்குனர் பத்மாவதி வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு புதிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

அப்போது அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் 29 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தற்போது 12 ஆயிரம் பேருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்க உள்ளோம். இன்னும் 17 ஆயிரம் பேர் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர். நான் 3-வது முறையாக அமைச்சராக உள்ளேன். அடுத்த முறையும் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கொண்டுவர பாடுபடுவோம்.

காங்கிரஸ் அரசின் திட்டங்களை கவர்னரும், அதிகாரிகளும் முடக்குகிறார்கள். சட்டமன்றத்துக்கு வரும் மக்கள் குடிக்க டீ வாங்குவதற்கு கூட தன்னிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்று கவர்னர் சொல்கிறார். அரசு செயல் படுவதை தடுக்க இதுபோன்றவற்றை செய்கிறார்கள்.

கவர்னர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். நிதித்துறை செயலாளரும், தற்போது கலெக்டர் பொறுப்பினை வகிப்பவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மூலம் திட்டங்கள் தடுக்கப்படுகின்றன. மக்கள் நல திட்டங்களை செயல் படுத்த முடியாத மோசமான நிலையில் புதுவை உள்ளது. பஞ்சாப் அதிகாரிகள் தமிழ் தெரிந்த அதிகாரிகளை அடிமையாக நினைக்கின்றனர். இந்தியை திணிக்கவும் முயற்சி நடக்கிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது புதுவைக்கு 70 சதவீத தொகை மானியமாக கிடைத்தது. ஆனால் இப்போது அது 26 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டது. ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது வாங்கிய கடனை தற்போது நாராயணசாமி அடைத்து வருகிறார். ஆண்டுக்கு ரூ.600 கோடியை திருப்பி செலுத்தி வருகிறோம்.

நாங்கள் 5 மாதத்துக்கு இலவச அரிசிக்கான பணத்தை மக்களுக்கு கொடுக்க கோப்பு அனுப்பினால் அதை 3 மாதமாக கவர்னர் மாற்றுகிறார். எங்கள் ஆட்சியில் 14 மாதத்துக்கு இலவச அரிசி போட்டோம். இன்னும் 5 மாதத்துக்கு அரிசிக்கான தொகையை வழங்க உள்ளோம். நிதிச்சிக்கனம் பற்றி கவர்னர் பேசுகிறார். நாங்கள் முதல்-அமைச்சர் உள்பட 6 அமைச்சர்களும் ஆண்டுக்கு ரூ.2 கோடிதான் செலவிடுகிறோம். ஆனால் அவர் ஒருவர் மட்டும் ரூ.7 கோடி செலவிடுகிறார்.

விரைவில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு புதிய திட்டம் தொடங்க உள்ளோம். இதன்படி அவர்கள் ரூ.100-ம், கடைக்காரர்கள் ரூ.300-ம், செலுத்தினால் அவர்களது வருங்கால வைப்புநிதி கணக்கில் அரசு ரூ.1000 செலுத்தும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை அதிகாரிகள் மதிப்பதில்லை. 25 லட்சம் மக்கள்தொகை கொண்ட கடலூர் மாவட்டத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இருந்து நிர்வகிக்கிறார். ஆனால் 13 லட்சம் மக்கள்தொகை கொண்ட புதுவையில் 26 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு செலவாகிறது? இதுதான் கவர்னரின் சிக்கன நடவடிக்கையா? அவர்களுக்கு அனைத்து செலவுகளையும் செய்ய அனுமதிக்கும் கவர்னர் ஏழைகளுக்கு தருவதை தடுக்கிறார்.

புதுவையின் உரிமையை மீட்க நாம் போராட வேண்டி உள்ளது. சட்டமன்றம் இல்லாத புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை உருவாக்க அவர் முயற்சி செய்கிறார். அதற்கான வேலையை கவர்னர் பார்க்கிறார். அதை எதிர்த்து மக்கள் போராட தயாராக உள்ளனர். புதுவை மாநில வளர்ச்சிக்காக கவர்னர் மத்திய அரசிடமிருந்து ஒரு பைசாகூட பெற்றுத்தரவில்லை.

ஆனால் சுற்றுலா வளர்ச்சிக்கு வந்த ரூ.100 கோடியை திருப்பி அனுப்பி உள்ளார். சுனாமி நிதி ரூ.44 கோடியையும் திருப்பி அனுப்பி உள்ளார். புதுவை மாநிலத்தின் வருமானத்தை பெருக்க கவர்னரும், செயலாளர்களும் தயாராக இல்லை. வரும் நிதியைக்கூட செலவிடாமல் உள்ளனர். கடந்த காலங்களில் சைக்கிளில் வலம் வருகிறேன் என்ற கவர்னர் கொரோனா காலத்தில் மக்களை சந்திக்காமல் எங்கு போனார்?

74 வயதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். நோயாளிகளை சந்திக்கிறார். ஆனால் இவர் எதையும் செய்யாமல் அரசு செய்வதையும் தடுக்கிறார். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு எதையும் செய்யாமல் கவர்னர் தடுத்துவிட்டால் நாம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர். இதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

முடிவில் துணை இயக்குனர் கலாவதி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com