கவர்னர் மாளிகை நாளை முற்றுகை : வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

குடகில் வெள்ள பாதிப்புகளை பிரதமர் பார்வையிட வலியுறுத்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு நாளை (திங்கட்கிழமை) போராட்டம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்து உள்ளார்.
கவர்னர் மாளிகை நாளை முற்றுகை : வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
Published on

பெங்களூரு,

குடகு மாவட்டத்தில் பெய்த கனமழையால், அந்த மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் குடகில் வெள்ள பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடவில்லை என்றும், கேரளாவுக்கு மட்டும் சென்று வெள்ள பாதிப்புகளை பார்த்திருப்பதுடன் நிவாரண நிதியும் வழங்கி இருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினரும், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்களும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

இதுகுறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடகு மற்றும் கேரளா மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால், பெருமளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் வெள்ள பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு, அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளார். ஆனால் குடகு மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடவில்லை. நமது நாட்டின் பிரதமர் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது சரியில்லை. குடகில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ரூ.5 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தெரியவந்துள்ளது.

அதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட வேண்டும். மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி உதவி வழங்க வேண்டும். குடகில் வெள்ள பாதிப்புகளை பிரதமர் பார்வையிட வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி (அதாவது நாளை) கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் படும். குடகு மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசு மற்றும் பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்லவே கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட உள்ளது. அப்படி இருந்தும் பிரதமர் பார்வையிடவில்லை என்றால், கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com