லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் உரிமையாளர்கள் கோரிக்கை

லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்ற ஆணையரின் புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் உரிமையாளர்கள் கோரிக்கை
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழியபாண்டியனை நேற்று நேரில் சந்தித்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 25.3.2020 முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கட்டுப்பாடு விதிக்கப்பட்டு முதல் 2 மாதங்களில் வாகனங்களை இயக்காமல் இருந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காக மிகக் குறைந்தளவு வாகனங்களே இயக்கப்பட்டன. கடந்த 8 மாதங்களாக கொரோனா வைரஸ் நோய் தொற்றால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில், சரக்கு வாகனங்களுக்கு போதிய லோடு கிடைக்காததால் லாரி உரிமையாளர்கள் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை இன்னும் முழுமையாக தொடங்காத நிலையே உள்ளது. இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் காலாண்டு வரி, வாகன காப்பீடு ஆகியவற்றை அரசின் ஆணைக்கிணங்க வருவாயின்றி தவிக்கும் சூழலிலும் நிலுவையின்றி செலுத்தி வருகிறோம்.

கர்நாடகா, ஒடிசா, இமாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் காலாண்டு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒளிரும் பட்டை ஒட்டுவது, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ்.(வாகனம் இருப்பிடத்தை கண்டறியும் கருவி) போன்ற கருவிகளை, குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற நடைமுறை இல்லை.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில், அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளான ஏ.ஆர்.ஏ.ஐ., ஐ.சி.ஏ.டி. போன்ற அமைப்புகளின் அனுமதியை பெற்றுள்ள அனைத்து தயாரிப்பு நிறுவனங்களின் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளையும் பொருத்தலாம் என உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.

ஏ.ஆர்.ஏ.ஐ., ஐ.சி.ஏ.டி. போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒளிரும் ஸ்டிக்கர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ள நிலையில், குறிப்பிட்ட 2 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

கடந்த 20.11.2020 அன்று தகுதிச்சான்றிதழ் பெறும் கனரக வாகனங்களுக்கு, குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரித்துள்ள ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையரால் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், ஏ.ஆர்.ஏ.ஐ., ஐ.சி.ஏ.டி. போன்ற அமைப்புகளால் 140 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் வெறும் 8 நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது. இதனால் ஏற்கனவே ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவு செய்து ஒரு வாகனத்துக்கு பொருத்தி உள்ள நிலையில், குறிப்பிட்ட இந்த நிறுவனங்களின் கருவிகள் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. போக்குவரத்து ஆணையரின் இதுபோன்ற ஆணைகளால் லாரி உரிமையாளர்களுக்கு கடும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com