நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டதால் பட்டதாரிகள் ஏமாற்றம் தஞ்சை நீதிமன்றத்தில் பரபரப்பு

காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற இருந்த நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டதால் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தஞ்சை நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.
நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டதால் பட்டதாரிகள் ஏமாற்றம் தஞ்சை நீதிமன்றத்தில் பரபரப்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை நீதிமன்றத்தில் காலியாக உள்ள 4 இளநிலை நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நேற்று நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நேர்காணலில் பங்கேற்கும்படி 750 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி தஞ்சை மட்டுமின்றி சென்னை, கோவை, தூத்துக்குடி, திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு வந்திருந்தனர். சிலர் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர்.

ஆனால் நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அலுவலக நுழைவு பகுதியில் நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்தது. இதை பார்த்தவுடன் நேர்காணலுக்காக வந்திருந்தவர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. என்ன? காரணத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமல் தவித்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்த சார்பு நீதிபதியிடம் சென்று நேர்காணல் எதற்காக ஒத்தி வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.

விளக்கம்

உடனே அவர், எல்லோரையும் அழைத்து அறையில் அமர வைத்து நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கினார். அப்போது அவர், காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தி ஆட்களை தேர்வு செய்தால் வெளிப்படை தன்மை இருக்குமா? என்ற சந்தேகம் எழலாம். ஏற்கனவே சில இடங்களில் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு நடத்தினால் தகுதியானவர்கள் பணிக்கு வருவதுடன், வெளிப்படை தன்மையும் இருக்கும். இதனால் நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் எழுத்துத்தேர்வு தொடர்பான அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

இந்த விளக்கத்தை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com