

திருவள்ளூர்,
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கிராம சபை கூட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் நாளை(திங்கட்கிழமை) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தை அந்தந்த ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடத்த வேண்டும்.
கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்து திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.
கழிப்பறை இல்லாதோர் பட்டியல்
திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சி, கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளிக்கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம், தாய் திட்டம் 201617, ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள், முன்னேற்றம் மற்றும் நிதிசெலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
வளர்ச்சி பணிகள்
மேலும் கிராம சபை கூட்டத்தில் பிற துறைகளை சார்ந்த அலுவலர்களையும் கலந்து கொள்ள செய்து அவர்களது துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதில் பெருவாரியான மக்கள் பங்கேற்கும் பொருட்டு கிராம ஊராட்சிகளில் முழுமையான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பார்வையிடவும் ஊராட்சி ஒன்றிய அளவில் உதவி இயக்குனர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.