

மைசூரு:
கொரோனா பரிசோதனைக்கு பயந்து மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூரு டவுனில் நடந்து உள்ளது.
75 வயது மூதாட்டி
மைசூரு டவுன் முனீஸ்வரா நகரில் வசித்து வந்தவர் மகாதேவம்மா(வயது 75). இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் தனது வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் மகாதேவம்மா, அந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்று உள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த மகாதேவம்மா கொரோனா பரிசோதனை செய்தால் நமக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி விடும் என்று பயந்து போய் இருந்ததாக தெரிகிறது.
தீக்குளித்து தற்கொலை
மேலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள பயமாக உள்ளது என்று அக்கம்பக்கத்தினரிடம் மகாதேவம்மா கூறி வந்தாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த மண்எண்ணயை எடுத்து உடலில் ஊற்றிய மகாதேவம்மா பின்னர் உடலில் தீ வைத்து கொண்டார்.
இதில் அவர் உடல் முழுவதும் தீ மளமளவென வேகமாக பரவி எரிந்தது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் மகாதேவம்மா உடல்கருகி இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உதயகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாதேவம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து மகாதேவம்மா தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து உதயகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.