சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் ; முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

சேலம் மாநகராட்சி பகுதியில் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் ; முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
Published on

சேலம்,

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது 4-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. ஆனாலும் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் உள்ளிட்டவை திறப்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் முதல் கிராமப்புற பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், சேலம் மாநகராட்சி பகுதியில் சலூன் கடைகளை நடத்திவரும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் நிருபர்களிடம் கூறியதாவது-

கடந்த 2 மாதங்களாக சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் எங்களது குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதித்துள்ளனர். சேலம் மாநகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் உள்ளன. ஆனால் கிராமப்புறங்களில் மட்டும் கடைகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. எனவே எங்களது தொழிலில் கவனம் செலுத்தி எங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், சேலம் மாநகர பகுதியிலும் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கும் பட்சத்தில் தமிழக அரசு கூறும் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் சேவை செய்வோம். முக கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியாற்றுவோம்.

எனவே, கிராமப்புறங்களில் சலூன் கடைகளை திறந்தது போல மாநகராட்சி பகுதிகளிலும் கடைகளை திறக்க அரசு உடனே உரிய வழிவகை செய்ய வேண்டும். சலூன் கடைகள் திறக்கப்படாததால் கடந்த 60 நாட்களாக வருமானமின்றி கடை வாடகை மற்றும் மின் கட்டணங்களை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com