

எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் பெரியமணலி கிராமத்தில் 12 வார்டுகளில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் ஜேடர்பாளையத்தில் 6 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க ஊராட்சி முழுவதும் சுகாதாரத்துறை நிர்வாகம் ஆய்வு செய்து சுகாதார பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை கண்டித்தும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாததை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று திடீரென பெரியமணலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு பெரியமணலி கிளை செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். கட்சியின் ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய குழுஉறுப்பினர் ரமேஷ், மாதர் சங்க தலைவர் செல்வி மற்றும் துரைசாமி, கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதையறிந்த எலச்சி பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து தலைமையில் அரசு மருத்துவர் மதுமதி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக கூறிய பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.