

திருவெண்காடு,
நிலக்கடலை எண்ணெய் வித்து பயிர்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
மேலும் ருசியான கடலை மிட்டாய், மிக்சர் உள்ளிட்ட பல உணவுகள் தயாரிக்கவும் நிலக்கடலை பயன்படுகிறது. இதனை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு பல்வேறு நன்மைகளும் கிடைக்கின்றன. இதனால் நிலக்கடலையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். இந்த நிலக்கடலை பயிர் 110 நாட்களில் விளையும் தன்மை கொண்டதாகும்.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட தாண்டவங்குளம், கொள்ளிடம், மாங்காணம்பட்டு, கடவாசல், மங்கைமடம், திருவெண்காடு, நெய்தவாசல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகின்றன. தற்போது நிலக்கடலை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நிலக்கடலையை பயிரிட்ட விவசாயிகள் கூறியதாவது:-
தற்போது மழை குறைந்து மிதமான சூழ்நிலை காணப்படுகிறது. நிலக்கடலை சாகுபடி செய்ய முதலில் மண்ணை நன்றாக உழுது பதப்படுத்தி, பாத்திகட்டி விதைகளை ஊன்றிவிடுவோம்.
மண் ஈரப்பதமாக இருப்பதால் 4 நாட்களில் முளைத்துவிடும். பின்னர் தண்ணீர் பாய்ச்சி, களைகளை எடுத்து பராமரிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் மண்புழு உரம் மற்றும் பஞ்சகவ்ய கரைசலை இட்டு பராமரிக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைத்தது. அதாவது ஒரு மூட்டை ரூ.2 ஆயிரத்து 500 வரை விற்றது.
ஆனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு ஒரு மூட்டை ரூ.1,500-க்கு மட்டுமே விற்பனையானது. இதனால் விவசாயிகள் மிகவும் நஷ்டமடைந்தனர். இந்த ஆண்டாவது உரிய விலை கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளோம். நிலக்கடலை பயிருக்கு வரிவிலக்கு அளிக்கவும், இயற்கை சீற்றங் களால் பாதிக்கும்போது பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.