பொன்னேரியில் நிலத்தடி நீர் திருட்டு; 14 ஆழ்துளை கிணறுகள் அகற்றம் வருவாய்த்துறையினர் நடவடிக்கை

பொன்னேரியில் நிலத்தடி நீர் திருட்டு தொடர்பாக 14 ஆழ்துளை கிணறுகள் அகற்றப்பட்டன.
பொன்னேரியில் நிலத்தடி நீர் திருட்டு; 14 ஆழ்துளை கிணறுகள் அகற்றம் வருவாய்த்துறையினர் நடவடிக்கை
Published on

பொன்னேரி,

பொன்னேரி தாலுகாவில் கோளூர் குறுவட்டத்தில் அடங்கிய பனப்பாக்கம், கோளூர், பெரியகரும்பூர், தேவம்பட்டு, அகரம், சேலியமேடு, பூங்குளம், பூவாமி உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிலங்களில் இறால் பண்ணைகள் அமைத்து உள்ளனர்.

மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயத்திற்கு பெறப்பட்ட இலவச மின்சாரத்தை கொண்டு மின்மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை திருடி இறால் மீன்கள் வளர்த்து வருகின்றனர். இறால் பண்ணைகளுக்கு தேவையான தீவனங்கள், வேதிப்பொருட்கள் தண்ணீரில் கலப்பதால் விவசாய நிலங்கள் மற்றும் அரசு நிலங்கள் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் பயிர்த்தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. நந்தகுமார் மேற்பார்வையில் தாசில்தார் எட்வர்ட்வில்சன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் இறால் பண்ணைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை திருடுவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட 14 ஆழ்துளை கிணறுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். மீண்டும் ஆழ்துளை கிணறுகளை திருட்டுத்தனமாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com