ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கான குழு போட்டிகள்

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கான குழு போட்டிகள்
Published on

கரூர்,

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை (சமக்ரா சிக்ஷா) சார்பில் விளையாட்டு தினத்தையொட்டி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தாந்தோன்றிமலை விளையாட்டு அரங்கில் தொடங்கியது. அன்றைய தினம் மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

தொடர்ந்து நேற்று 2-வது நாளில் மாணவிகளுக்கான குழு போட்டிகள் நடந்தது. இதில் கபடி, கால்பந்து, கைப்பந்து, கேரம், கோ-கோ, இறகுபந்து, சதுரங்கம் ஆகிய குழுப்போட்டிகளில் அரசு பள்ளி மாணவிகள் அணியினர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். சதீஷ், மணிமாறன், மகாமுனி மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு போட்டிகளை நடத்தினார்கள்.

ஓட்டப்பந்தயம்

முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் (பொறுப்பு), மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளருமான கபீர் போட்டிகளை தொடங்கி வைத்து, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களை பட்டியலிட்டு பேசினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பக்தவச்சலம், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், ஆத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உமா ஆகியோர் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) 3-வது நாளில் மாணவ, மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடைபெற உள்ளன. அதன் பிறகு மாவட்ட அளவிலான குழு, தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com