கூடலூர் அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
கூடலூர் அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்
Published on

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் வீடுகளையும், விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் பகல் மற்றும் இரவில் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு கூடலூர் திருவள்ளுவர் நகர், ஆனைசெத்தக்கொல்லி, தேவர்சோலை உள்ளிட்ட பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்தின. பின்னர் பொதுமக்களின் உதவியுடன் காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். இந்த நிலையில் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானைகள் புகுந்தன.

பின்னர் அப்பகுதியில் இருந்த தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகை யிட்டன. இதனால் பொதுமக்கள் பீதியில் தங்களது வீட்டுக்குள் பதுங்கி இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி பாபுராஜ் என்பவரின் வீட்டை காட்டு யானைகள் முற்றுகையிட்டு தாக்கியது.

இதில் அவரது வீட்டு பின்புறம் இருந்த கழிப்பறை உள்பட 2 அறைகள் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ஓவேலி வனவர் செல்லதுரை, வன காப்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் காட்டு யானைகள் கூட்டத்தை விரட்டியடித்தனர்.

இதனால் யானைகள் அங்கிருந்து சென்றன. தொடர்ந்து காட்டு யானைகள் குயின்ட் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் ஊருக்குள் நுழைந்து விடாமல் இருக்க வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, தனியார் எஸ்டேட்டுகளில் விதிமுறைகளை மீறி மின்வேலிகள் அளவுக்கு அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவில் உலா வரும் காட்டு யானைகள் தங்களது வழித்தடங்களில் நடந்து செல்ல முடியாமல் பாதை மாறி ஊருக்குள் வருகிறது.

இதனால் உயரதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்தி விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை அகற்ற வேண்டும், என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com