கூடலூர் பகுதியில் பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரங்கள்

கூடலூர் பகுதியில் பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரங்கள் பரவலாக காணப்படுகிறது.
கூடலூர் பகுதியில் பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரங்கள்
Published on

கூடலூர்,

பல்லுயிர் வளம் மிக்க மேற்கு தொடர்ச்சி மலையில் 5 ஆயிரம் வகை பூக்கும் தாவரங்களும், 139 பாலூட்டிகளும், 508 வகையான பறவைகளும் உள்ளன. இதுதவிர அரிய வகை தாவரங்கள், சிறு வன உயிரினங்களும் உள்ளன. 1,232 தாவரங்கள் நீலகிரியில் காணப்படுகிறது.

டொசீரா, பெல்டேட்டா என பெயர்கள் கொண்ட தாவரங்கள் பூச்சிகளை உண்ணும் தன்மை உடையவை. இந்த தாவரங்கள் இமயமலைக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காணப்படுகிறது. டொசிரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த தாவரத்தில் டொசிரா பர்மானி, பெல்டேட்டா, இன்டிகா என பிரிவுகள் உள்ளன. இந்த வகை தாவரங்கள் கூடலூர், தேவாலா, நடுவட்டம் பகுதியில் பரவலாக காணப் படுகிறது.

டிசம்பர் முதல் மே மாதம் வரை கடும் பனிப்பொழிவு மற்றும் கோடை காலம் என்பதால் பசுமை இழந்து காணப்படும் வனப்பகுதிக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் பல நூறு ஏக்கர் பரப்பளவிலான புல்வெளிகள், அரிய வகை தாவரங்கள், சிறு வன உயிரினங்கள் ஆண்டுதோறும் தீயில் கருகி விடுகின்றன. இதனால் பூச்சிகளை பிடித்து உண்ணும் தாவரங்களும் அழிவின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.இது குறித்து தாவர ஆய்வாளர் சுந்தரேசன் கூறியதாவது:-

நீலகிரி உயிர் சூழலில் அரிய வகை தாவரங்கள் உள்ளன. டொசிரா பர்மானி, பெல்டேட்டா, இன்டிகா தாவரங்கள் பூச்சிகளை பிடித்து உண்ணுகிறது. கூடலூர் பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு இந்த வகை தாவரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுபோன்ற தாவரங்களை பாதுகாக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் தாவரவியல் படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com