

சேலம்,
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. இதுகுறித்து சேலம் ஜங்சனில் உள்ள ரெயில்வே கோட்ட அலுவலகத்தில், கோட்ட மேலாளர் சுப்பாராவ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ரெயில்வே வாரியம் அந்தந்த மண்டல ரெயில்வே துறைகளுக்கு 24 வழிகாட்டுதல்களை பின்பற்றிட அறிவுறுத்தியது. சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் தேசிய பசுமை தீர்ப்பாய வழிகாட்டுதல்களை பின்பற்றின. இந்த வழிகாட்டுதல்களில் சுற்றுச்சூழல் மேலாண்மை தரம் என்ற ஐ.எஸ்.ஓ. 14001:2015 சான்றிதழ் பெறுவது முதல் படியாகும். இதையடுத்து சேலம், ஈரோடு உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்களுக்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடிவில் சேலம் உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.
மின்சார சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் எல்.இ.டி. பொருத்துதல், மக்கும், மக்காத கழிவுகளை முறையாக கையாளுதல், ரெயில் நிலையங்களில் அனைத்து நடை மேடைகளிலும் மக்கும், மக்காத குப்பை கழிவுகளை சேகரிக்க பல வண்ண தொட்டிகளை வைத்திடுதல், ரெயில் நிலையத்தை சுத்தமாக வைத்திருத்தல், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க போதிய எண்ணிக்கையில் கழிப்பறை கட்டுதல் ஆகிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை நிறைவேற்றிட சேலம் கோட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
உபயோகப்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்ய சுத்திகரிப்பு மையங்கள் 24 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஒரு நாளைக்கு 8 லட்சம் தண்ணீரை பெற முடியும். நடப்பாண்டில் டிக்கெட் பரிசோதனை மூலம் அபராதமாக ரூ.4 கோடியே 75 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதங்களில் ரூ.305 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 31 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற சிறப்பாக பணியாற்றிய உதவி வணிக மேலாளர் மாயா பீதாம்பரம் (சேலம்), உதவி சுகாதார அலுவலர் குமார் (கரூர் மற்றும் மேட்டுப்பாளையம்), கோட்ட சுகாதார நல அலுவலர் கும்பாரே (திருப்பூர்), ரெயில் பெட்டி பணிமனை அலுவலர் தினேஷ் (ஈரோடு) ஆகியோரை கோட்ட மேலாளர் சுப்பாராவ், கூடுதல் கோட்ட மேலாளர் அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், முதுநிலை எந்திரவியல் பொறியாளர் முகுந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவர் களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது.