

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பிச்சாட்டூர் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆரணி ஆற்றில் கடந்த 4 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. மேலும், ஆரணி-மங்கலம் செல்லும் வழியில் ஆரணி ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இப்பகுதியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், மங்கலம், புதுப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதிக்கு சென்று வர இயலாத நிலை ஏற்பட்டது.
இதனை அறிந்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் படகு போக்குவரத்தை நேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழன் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், சந்திரசேகர், ஆரணி பேரூர் முன்னாள் செயலாளர்கள் கண்ணதாசன், முத்து, மாவட்ட பிரதிநிதி கரிகாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுரேஷ், ஜெகநாதன், தேவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.