தாய்மாமனைப்போல், உங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்குவேன் குன்னம் தொகுதி பொதுமக்களுக்கு வேட்பாளர் வ.கவுதமன் வாக்குறுதி

திரைப்பட இயக்குனர் வ.கவுதமன், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார்.
தாய்மாமனைப்போல், உங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்குவேன் குன்னம் தொகுதி பொதுமக்களுக்கு வேட்பாளர் வ.கவுதமன் வாக்குறுதி
Published on

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் திரைப்பட இயக்குனர் வ.கவுதமன், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.

இவ்வுலகின் மூத்த குடி தமிழ்க்குடி. உலகில் தோன்றிய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ் மொழி. ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எம் தமிழினத்தின் தலைநிமிர்வுக்காகவே இம் மண்ணின் மைந்தனான நான், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு, தமிழ்ப் பேரரசு கட்சி என தொடங்கி, குன்னம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறேன்.

பெரும் வரலாறு கொண்ட எம் தமிழ் மண்ணின் வரலாற்றை மீட்டெடுக்க, என்னை குன்னம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உரிமையோடு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் கடந்த நிலையில், நாம் ஏன் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறோம் என்று இப்போதாவது சிந்திக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டி, விவசாயத்திற்கான நீர் மேலாண்மையை உலகிற்கு கற்றுக் கொடுத்தவன் கரிகாலன். இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் நம் மண்ணில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுலகத்தின் பாதி நாடுகளைக் கட்டி ஆண்டவர்கள் நம் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும். ஆனால் இன்று, மானத்தோடும் வீரத்தோடும் எம் மண்ணை ஆள தமிழனுக்கு உரிமை இல்லை. நான் ஏன் ஜல்லிக்கட்டு உரிமைக்காக மதுரை அவனியாபுரத்தில் ரத்தம் சிந்தி, தைப்புரட்சியை தொடங்க வேண்டும்? விவசாயிகளைக் காக்க, சென்னை கத்திப்பாரா பாலத்தில் போராடி நான் ஏன் புழல் சிறையில் அடைக்கப்பட வேண்டும்? ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஏழு தமிழர் விடுதலை, 20 தமிழர்கள் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு, தமிழீழ உரிமையை மீட்க, இரண்டு முறை ஐ.நா. சபையில் பேச்சு, போராட்டம் என, எனது எத்தனையோ போராட்டங்களுக்கு, நான் ஏன் ரத்தம் சிந்தி ஜனநாயக யுத்தம் செய்து, இந்தச் சின்ன வயதிற்குள் 19 முறை சிறைக்குச் செல்ல வேண்டும்? கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவில்லை என்பது ஒருபுறமிருக்க, இதற்கிடையில் ஆண்ட ஒரு சில தமிழர்களும் கொள்ளையடிப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, இனிவரும் எம் தமிழ்த் தலைமுறை, இந்த மண்ணை ஆளவும், என் மண்ணுக்கான உரிமையை மீட்டெடுக்கவுமே, நான், நம் குன்னம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறேன். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இனிக்க இனிக்கப் பேசி, எம் மண்ணையும் மக்களையும், டெல்லிக்கு நிரந்தரமாக அடகு வைத்துவிட்டார்கள். தங்கள் குடும்பத்திற்கு உள்ளாகவே சாராய ஆலைகளை திறந்து, இருவரில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் சாராயக் கடைகளை நடத்துகிறார்கள். எம் மக்களை நிரந்தர குடிகாரர்களாக்கி, நம் வீட்டுப் பெண்களின் தாலியை அறுத்து, நிதானமற்ற நிலையில் தமிழ்நாட்டை இன்று, தள்ளாட வைத்திருக்கிறார்கள். நீங்கள் என்னை, பலாப்பழம் சின்னத்தில் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினால் காலங்காலமாகப் படித்து முன்னேற வேண்டிய நம்வீட்டு பிள்ளைகளுக்கு நல்ல, தரமான பள்ளிக்கல்வியைக் கொடுத்து, அவர்கள் உயர்கல்வி சென்று, நம் தமிழ் மண்ணிலேயே அனைவரும் அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்ல, மற்ற மாநிலங்களைப் போலவே 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை, அந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை என சட்டமன்றத்தில் சட்டம் இயற்றச் செய்வேன். சாதி, மதம் கடந்து இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக திகழ்ந்து, நம் தமிழ் மண்ணின் அனைத்து உரிமைகளையும் காத்து, இழந்த நம் உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க, என் உயிர் மூச்சு உள்ளவரை இந்த மண் மீது சத்தியமாக போராடி மீட்பேன்.

குடிக்க வைத்து, நம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திய தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் பாடம் புகட்டுங்கள். ஒரு தாய் மாமனைப் போல, நம் வீட்டுப் பிள்ளைகளைப் படிக்கவைத்து, அவர்களை ஆளாக்க துடிக்கும் எனக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள். சிமெணட் ஆலைகளுக்கு பதிலாக பருத்தி, மக்காச்சோளம், முந்திரி மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு பெரு நம்பிக்கையான வாழ்வியலை உறுதிப்படுத்தி, உயர்தர பள்ளிகளையும், உயர்தர மருத்துவமனைகளையும், இரு கட்சிகளும் வாக்குறுதி தந்து இதுவரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மகளிர் கல்லூரி, மருத்துவக் கல்லூரியையும் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தையும், நான் பதவியேற்ற ஐந்தாண்டுகளுக்கு உள்ளாகவே எனது உறுதிமிக்க போராட்டத்தால், சட்டமன்றத்தில் போராடி நம் குன்னம் தொகுதிக்கு கொண்டு வருவேன். விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் என அவர்தம் உன்னதமான வாழ்வுக்கென, உயிர் உள்ளவரை என் பணி தொடரும். பலாப்பழம் சின்னத்தில் நான் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்றால், குன்னம் தொகுதி மட்டுமல்ல ஒட்டுமொத்த நம் தமிழினத்தின் தலைநிமிர்வையும் உறுதி செய்வேன். மீண்டும் ஒரு பெரும் வரலாற்றை உருவாக்குவேன். எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும். எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com