குர்லா டெர்மினசில் பிளாட்பார தடுப்புச்சுவர் மீது ரெயில் மோதி விபத்து நீண்ட தூர ரெயில்கள் தாமதமாக இயக்கம்

குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் பிளாட்பார தடுப்புச்சுவர் மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக நீண்ட தூர ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
குர்லா டெர்மினசில் பிளாட்பார தடுப்புச்சுவர் மீது ரெயில் மோதி விபத்து நீண்ட தூர ரெயில்கள் தாமதமாக இயக்கம்
Published on

மும்பை, மத்திய ரெயில்வேயின் குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நீண்ட தூர ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலை பீகார் மாநிலம் முசாபர்பூரில் இருந்து பவன் எக்ஸ்பிரஸ் ரெயில் குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்துக்குள் வந்தது. 3-வது பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருந்த அந்த ரெயிலில் இருந்து இறங்குவதற்காக பயணிகள் தயாராகி கொண்டிருந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் அந்த ரெயில் நிற்காமல் சென்று பிளாட்பார தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் தடுப்புச்சுவர் உடைந்து நொறுங்கியது.

ரெயில் பெட்டிகளும் குலுங்கின. இதனால் பயணிகள் பதறி அடித்தபடி கீழே இறங்கினார்கள். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. பிளாட்பார தடுப்புச்சுவர் மீது ரெயில் என்ஜின் மோதிய இந்த சம்பவத்தால் குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் பரபரப்பு உண்டானது.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் மத்திய ரெயில்வே அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில், அந்த தடுப்புச்சுவர் இடிபாடுகள் அகற்றப்பட்டு பின்னர் மீண்டும் அங்கு புதிய தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் காரணமாக குர்லா டர்மினஸ் ரெயில் நிலையத்தில் நீண்ட தூர ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com