

சென்னை,
முன்னாள் மத்திய மந்திரியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அவரது படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து தொடர்ந்து வெளிவரும் விஷயங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். உண்மை நிலையை ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் ஆராய்ந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஹஜ் பயண மானியம் ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, தொடர்ந்து மக்கள் மீது அழுத்தத்தை பா.ஜ.க. அரசு கொடுத்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஆர்ப்பாட்டம்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னை பற்றி தெரிவித்து வரும் கருத்து குறித்து கேட்கிறீர்கள். தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்பார்கள் ஆனால் அதற்கு முன்னதாகவே வழிபிறந்து விட்டது. நான் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். மற்றவர்கள் கருத்து கூறுவது பற்றி நான் கவலை படமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்லாமியர்களுக்கான ஹஜ் பயண மானியத்தை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், சிவ.ராஜசேகரன், எம்.எஸ். திரவியம் ஆகியோர் தலைமை தாங்கினர். மீனவரணி மாநிலத்தலைவர் கஜநாதன், திரைப்பட இயக்குனர் கே.ராஜன், இதயத்துல்லா, தி.நகர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
புறநகர்
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, பிராங்கிளின் பிரகாஷ், சீதாபதி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகீந்திரன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நாகராஜ், அரவிந்த், ஆறுமுகம், சேதுபதி, தேசியமணி உள்பட 200 பேர் கலந்து கொண்டனர்.
ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆவடி நகர காங்கிரஸ் கட்சி செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.