தேரோட்டத்தை பாதியில் நிறுத்திய பக்தர்கள்

பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் தேரோட்டத்தை பக்தர்கள் பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவிழா தொடர்பாக 34 பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேரோட்டத்தை பாதியில் நிறுத்திய பக்தர்கள்
Published on

பணகுடி,

நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்க சுவாமி கோவில் தைப்பூச தேரோட்ட திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

2-ந் திருநாளன்று இரவு 10.30 மணிக்கு மேல் திருவிழா நடத்தியது தொடர்பாக 21 பேர் மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 3-ந் திருநாள் விழாவை நடத்திய சமுதாய தலைவர்கள், கரகாட்டம், மேள கலைஞர்கள் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து கடந்த 24-ந் தேதி முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தலைமையில் பொதுமக்கள் கோவிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் 9-ந் திருநாளான நேற்று காலை 10.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் மற்றும் சமுதாய தலைவர்கள் விசுவநாதன் ஆசிரியர், மாணிக்கம், கணேசன், வக்கீல் வெங்கடேசன், முத்து உள்பட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

ரதவீதிகளில் தேர் சென்று கொண்டிருந்தது. கீழ ரதவீதி, தெற்கு ரதவீதியை கடந்து 2.30 மணிக்கு மேல ரதவீதிக்கு தேர் வந்தது. சிறிது தூரம் வந்தபோது பக்தர்கள் திடீரென தேர் இழுப்பதை நிறுத்திவிட்டு, தேருக்கு முன்னே அமர்ந்தனர். பக்தர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரியும், விழா நாட்களில் இந்தாண்டு போல் இனி எப்போதும் போலீஸ் கெடுபிடி செய்யக்கூடாது என்று உத்தரவாதம் அளிக்கக்கோரியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

மாலை 6 மணி அளவில் ராதாபுரம் தாசில்தார் ரவிகுமார், பணகுடி வருவாய் ஆய்வாளர் ஆவுடையப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் எழுதி கொடுத்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து மாலை 6.45 மணிக்கு மீண்டும் தேர் இழுத்துச் செல்லப்பட்டு நிலையை அடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com