ஜல்லிக்கற்கள் கொட்டியதோடு பாதியில் நிற்கும் சாலைப்பணி, 3 மாதமாக கிராம மக்கள் அவதி

திருப்பரங்குன்றம் அருகே உள்ள வேடர்புளியங்குளம்- ஆஸ்டின்பட்டி சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கற்கள் கொட்டி 3 மாதமாகியும் பணி தொடங்கப்படாத அவலம் நீடிக்கிறது.
ஜல்லிக்கற்கள் கொட்டியதோடு பாதியில் நிற்கும் சாலைப்பணி, 3 மாதமாக கிராம மக்கள் அவதி
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சியை சேர்ந்த வேடர்புளியங்குளம்-ஆஸ்டின்பட்டி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மேடும் பள்ளமுமாக இருந்தது. ஆகவே வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது பாதசாரிகளும் அவதிக்குள்ளாகினர். ஆகவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின் பேரில் ரூ.46 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் 2.100 மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையை சீரமைக்க யூனியன் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக முறையான டெண்டர் விடப்பட்டது. பணியை தொடங்க ஜல்லிக்கற்களும் கொட்டப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தோர் சாலைக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று நிம்மதி அடைந்தனர்.

ஆனால் 80 சதவீதம் கற்கள் பரப்புவதற்கு பதிலாக 65 சதவீதம் பரப்பப்பட்டு இருப்பதாகவும் மேலும் இணைப்பு சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்படாத நிலை இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் தெரிகிறது. இதனால் சீராக முறைப்படுத்தப்பட்டு சாலை போட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதன்படி பணியை முடித்துக்கொடுக்காமல் பணி அப்படியே முடக்கப்பட்டு விட்டது.

3 மாதமாகியும் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்படாத நிலையே நீடிக்கிறது. குவியல் குவியலாக கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் சரிந்து சிதறிக் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, வேடர்புளியங்குளம், சின்னசாக்கிலிப்பட்டி கிராம மக்கள் பெரும் அவதி அடைகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கற்களில் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முறையாக சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com