

மணப்பாறை,
மணப்பாறை வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு தகவல்களையும் மடிக்கணினி மூலம் பதிவேற்றம் செய்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மடிக் கணினியில் பதிவேற்றம் செய்யும் போது அதற்கான இணையதள பயன்பாட்டிற்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.ஆயிரம் முதல் ஆயிரத்து 500 வரை செலவு செய்யப்படுகிறது.
ஆகவே அந்த செலவு தொகையை அரசு வழங்கிட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் நேற்று இரவு மணப்பாறை வட்டாரத்தை சேர்ந்த 11 கிராம நிர்வாக அலுவலர்கள் 14 மடிக்கணினிகளை மணப்பாறை தாசில்தார் தனலெட்சுமியிடம் ஒப்படைத் தனர்.
இணைய வழி பரிந்துரைகளை செய்ய முடியாத நிலையில் மடிக்கணினிகளை வைத்து ஒரு பயனும் இல்லாத காரணத்தினால் அவற்றை தாசில்தாரிடம் ஒப்படைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் இன்று(புதன்கிழமை) தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருகிற 29-ந் தேதி சென்னை வருவாய் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.