

மதுரை,
மதுரை மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உர விற்பனையின் போது விவசாயிகளிடம் பணம் பெறக்கூடாது. அதற்கு பதிலாக, மின்னணு பண பரிமாற்ற முறையை பின்பற்ற வேண்டும் என மத்திய உர அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே உரிமம் பெற்ற அனைத்து உர விற்பனையாளர்களும், மானிய விலையிலான உரத்தை விற்பனை செய்யும்போது விவசாயிகளிடம் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டும். அதன்படி க்யூ ஆர் கோடு கொண்ட விவரத்தை தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் பெற்று உர விற்பனை மையங்களில் வரும் 15-ந் தேதிக்குள் ஒட்ட வேண்டும்.
மேலும், உர விற்பனையை அதற்கான விற்பனை முனைய கருவி மூலமே மேற்கொள்ள வேண்டும். இதை கடைபிடிக்காத பட்சத்தில் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.