படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த, மாணவர்களை கண்டித்த பஸ் கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கண்டித்த பஸ் கண்டக்டர் சரமாரியாக தாக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் தனியார் கல்லூரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த, மாணவர்களை கண்டித்த பஸ் கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்
Published on

சூலூர்,

திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியார் பஸ் கோவை திருச்சி சாலையில் நேற்று காலை சுமார் 9 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் சூலூரை அடுத்த காரணம்பேட்டையில் நின்றது. அப்போது பஸ் படிக்கட்டில் கம்பியை பிடித்து தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். இதனால் மற்ற பயணிகள் ஏறி, இறங்க மிகவும் சிரமப்பட்டனர்.

இதை பார்த்த பஸ் கண்டக்டர் ஈஸ்வரன், படியில் தொங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவர்களை பஸ்சின் உள்ளே வருமாறு கூறினார். ஆனால் அவரது பேச்சை கண்டு கொள்ளாத மாணவர்கள் படிக்கட்டில் தொடர்ந்து நின்று கொண்டிருந்தனர். இதனால் கண்டக்டர் மாணவர்களை கண்டித்தார். இதன் காரணமாக அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவர், கண்டக்டரை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கினார். இதில் கண்டக்டர் காயம் அடைந்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதைப்பார்த்து மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் அந்த மாணவர்கள் உடனடியாக பஸ்சை விட்டு இறங்கி கல்லூரிக்குள் சென்று விட்டனர். உடனே, கண்டக்டரை தாக்கிய மாணவர்கள் படிக்கும் கல்லூரி முன் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். உடனே கல்லூரியின் நுழைவுவாயில் கதவு மூடப்பட்டது. இதையடுத்து பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் பயணிகள் கல்லூரி நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்து அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகளும் கல்லூரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில் சூலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாத், மருதையா பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கண்டக்டரை தாக்கிய மாணவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

அப்போது பயணிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முடிவில் கண்டக்டரை தாக்கிய கல்லூரி மாணவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று பயணிகள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com