கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லையில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

நெல்லை,

நெல்லையில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

மார்கழி மாதம் அமாவாசை மூலநட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரை அனுமன், மாருதி, ராமதூதன், சின்னதிருவடி என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அனுமன் ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் உள்ள ராமர் கோவில், பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கும், தனியாக உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் கொண்டாடப்பட்டது.

காட்டுராமர் கோவில்

நெல்லை அருகே உள்ள அருகன்குளம் காட்டுராமர் கோவிலில் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு காலை 8.30 மணிக்கு சிறப்பு கும்பபூஜையும், 10 மணிக்கு மகா அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். பின்னர் கம்பராமாயணத்தில் உள்ள சுந்தரகாண்டம் பற்றி பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி பேசினார்.

அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் உள்ள ராமதூத பக்த ஆஞ்சநேயருக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும், 1,008 பழங்களால் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் புஷ்பாஞ்சலியும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று காலை முதல் இரவு வரை அன்னதானம் நடந்தது.

பஞ்சமுக ஆஞ்சநேயர்

நெல்லை உடையார்பட்டி பைபாஸ் ரோட்டையொட்டி உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு லட்சுமி யாகம், 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு தீபாராதனை, 10.30 மணிக்கு திருப்படி பூஜை ஆகியவை நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர், தன்வந்திரி பெருமாள், கனகமகாலட்சுமிக்கு நேற்று அதிகாலையில் அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் ஆஞ்சநேயர் புஷ்பஅங்கி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா சார்பில், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கணேசபாண்டியன், மாநில பொதுச் செயலாளர் ரவிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் மாயாண்டி, மாநகர மாவட்ட தலைவர் இசக்கிபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருக்கல்யாண வைபவம்

நெல்லை சுத்தமல்லியில் உள்ள ஜெய்மாருதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், ராமர் ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு 108 தேங்காய்களை வைத்து ஆஞ்சநேயர் ஹோமம் நடத்தப்பட்டது. மாலையில் ராமர், சீதை திருக்கல்யாண வைபவம் நடந்தது. காலை முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது.

நெல்லை சன்னியாசி கிராமத்தில் உள்ள நெல்லை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதேபோல் நெல்லை சந்திப்பு வரதராஜபெருமாள், பாளையங்கோட்டை ராமசாமி, ராஜகோபால சுவாமி ஆகிய கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com