பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்: கைதான போலி பெண் டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டதாக போலி பெண் டாக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்: கைதான போலி பெண் டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்
Published on

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காமாட்சி அம்மன் கோவில் அருகே 10-ம் வகுப்பு படித்து, எம்.பி.பி.எஸ். டாக்டர் எனக்கூறி கிளினிக் நடத்தி வந்தவர் ராஜலெட்சுமி. இவரின் தவறான சிகிச்சையால் தொண்டியை சேர்ந்த மூதாட்டி இறந்ததாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து போலி பெண் டாக்டர் ராஜலெட்சுமியை போலீசார் கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது டிக்-டாக் நண்பர் சுரேந்திரன், செல்வம், பீட்டர், வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 5 பேர் மீதும் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனை தொடர்ந்து நீதிபதி பாலமுருகன் உத்தரவின் பேரில் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜலெட்சுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கும் செய்துங்கநல்லூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 2010-ம் ஆண்டு முதல் சென்னையில் கணவருடன் வாழ்ந்து வந்தேன். . என்னை எனது கணவர் சரியாக கவனிக்கவில்லை. அதனால் அவருடன் வாழ விரும்பவில்லை.

இந்த நிலையில் 2017-ம் ஆண்டு காரைக்குடியை சேர்ந்த சுரேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நானும் அவரும் மறைமலை நகரில் வீடு எடுத்து கணவன் மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தோம். 2019-ம் ஆண்டு கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்கின் டாக்டர் எனக்கூறி வேலைக்கு சேர்ந்தேன். அதன் பின்னர் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருடன் சுரேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து கொடிப்பங்கு கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு வந்தோம். அப்போது தொண்டியில் பெண் டாக்டர் இல்லாததால் இங்கு கிளினிக் வைப்பதற்கு பணவசதி செய்து தருவதாக செல்வம் கூறினார். நான் ஸ்கின் கேர் டிப்ளமோ படித்து இருக்கிறேன் என கூறினேன். அதற்கு செல்வம், இங்கு நான் தான் எல்லாம், அதனால் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொள்வேன் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து தொண்டி காமாட்சி அம்மன் கோவில் அருகில் செல்வம் கிளினிக் வைத்து கொடுத்தார். பீட்டர் என்பவர் அடிக்கடி கிளினிக் வந்து செல்வார். செல்வமும், பீட்டரும் பொதுமக்களிடம் நன்றாக சிகிச்சை அளிப்பதாக கூறி எனது கிளினிக்கிற்கு பொதுமக்களை சிகிச்சைக்காக அனுப்பி வைப்பார்கள்.இந்தநிலையில் செல்வத்திடம் பேசுவதையும், வருமானத்தை கொடுப்பதையும் தவிர்த்து விட்டேன். இதனால் செல்வம் என்னை மிரட்ட ஆரம்பித்தார். இதுகுறித்து கடந்த பிப்ரவரி 21-ந்தேதி செல்வம் என்னை மிரட்டியதாக தொண்டி போலீசில் புகார் செய்தேன். அதன் பின்னர் 23-ந்தேதி நான் கிளினிக்கிற்கு வந்த போது சுரேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது கிளினிக் முன்பு நின்று கொண்டிருந்தனர்.

நான் போலி டாக்டர் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இதனை ஊரில் சொல்லி விடுவார்களோ என பயந்து பீட்டரிடம் கூறினேன்.

அப்போது எனது கிளினிக்கிற்கு வந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது எனது அறையில் உட்கார்ந்து, செல்வத்திற்கு எதிராக காவல் நிலையத்தில் உனக்காக மனு எழுதி கொடுத்தேன். அதற்கு நீ எனக்கு வக்கீல் பீஸ் ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும். ஆனால் நீ எனக்கு ஒரு முத்தம் கொடுத்தால், நான் அந்த காசை உன்னிடம் வாங்கப் போவதில்லை என்றார். மேலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டு சென்று விட்டார். பின்பு நான் கிளினிக்கை பூட்டிவிட்டு பீட்டரிடம் சென்று உதவி கேட்டேன். இதையடுத்து டிராவல்ஸ் மூலமாக ஒரு வண்டியை ஏற்பாடு செய்து என்னையும், சுரேந்தரையும் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நானும், சுரேந்திரனும் பழனிக்கு சென்றோம்.

அங்கு சுரேந்திரனுக்கு மொட்டை போட்டுவிட்டு அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கினோம். பின்பு நான் பீட்டருக்கு போன் செய்து அங்கு நிலவும் சூழ்நிலையை கேட்டேன். அவர் எங்களை வரச்சொன்னதால், அங்கு சென்று வீட்டை காலி செய்து கொண்டிருக்கும் போது போலீசார் வந்து எங்களை வீட்டில் வைத்து கைது செய்தனர்.என்னை பாலியல் ரீதியாகவும், தரக்குறைவாகவும் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய வக்கீல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com