பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை: மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம்

பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை: மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம்
Published on

சத்தியமங்கலம்,

திருச்சியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 38). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தார். ரங்கசமுத்திரத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் மாஜிஸ்திரேட்டு ராஜவேலு கோர்ட்டுக்கு சென்றார்.

அப்போது ஈரோடு மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி என்.உமாமகேஸ்வரி மற்றும் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு மோகன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் மாஜிஸ்திரேட்டு ராஜவேலுவிடம், அவரை பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அதற்கான உத்தரவு கடிதத்தை வழங்கினார்கள்.

இதுபற்றிய விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு:

சத்தியமங்கலம் கோர்ட்டில் திருமணம் ஆன இளம்பெண் ஒருவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அந்த பெண் மீது மாஜிஸ்திரேட்டு ராஜவேலுவுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.

அதனால் அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜவேலுவை பெண் வக்கீல் எச்சரிக்கை செய்து வந்தார்.

ஆனாலும் ராஜவேலு விடாமல் ஒரு நாளைக்கு 20 முதல் 30 முறை வரை எந்த நேரம் என்று பார்க்காமல் செல்போனில் பாலியல் ரீதியாக பேசி, தன்னுடைய ஆசைகளை தெரிவித்து வந்துள்ளார்.

மேலும் கொடைக்கானல், ஊட்டிக்கு இன்ப சுற்றுலா செல்லலாமா? என்று கேட்டுள்ளார். இதைக்கேட்ட பெண் வக்கீல் பலமுறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை.

இந்த நிலையில் ஒருநாள் ராஜவேலு செல்போனில் பாலியல் ரீதியாக பேசியதை பெண் வக்கீல் பதிவு செய்துகொண்டார். அதன்பின்னர் அந்த பேச்சு பதிவையும், நடந்தவைகளையும் மனுவாக எழுதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் மாஜிஸ்திரேட்டு ராஜவேலுவை ஐகோர்ட்டு நீதிபதிகள் பணி இடை நீக்கம் செய்து அதற்கான உத்தரவு கடிதத்தை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி என்.உமாமகேஸ்வரிக்கு நேற்று அனுப்பி ராஜவேலுவிடம் வழங்க உத்தரவிட்டார்கள். அதன்படி நேற்று அந்த கடிதத்தை என்.உமாமகேஸ்வரி ராஜவேலுவிடம் அளித்தார்.

இதுபற்றி ராஜவேலுவிடம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். அதன்பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com