

நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தில் உள்ள அரிச்சந்திரா ஆற்றில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் வேதாரண்யம் வட்டம் அடைப்பாறு ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் நீர் நன்னீராக உள்ளதால் தடுப்பணைக்கு மேல் உள்ள பகுதிகளில் உவர்நீர் இறால் வளர்ப்பு செய்ய கூடாது. மேலும் இப்பகுதியில் உவர் நீர் இறால் வளர்ப்பு குளங்களில் உள்ள தண்ணீரை திறந்து விட கூடாது.
அரிச்சந்திரா ஆறு மற்றும் அடைப்பாறு ஆகியவற்றில் இருந்து இறால் வளர்க்கும் குளத்திற்கு தண்ணீர் எக்காரணம் கொண்டும் எடுக்க கூடாது. இதை மீறினால் பண்ணைகளின் மீது மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மீன்வளத்துறையின் அனுமதியுடன் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு இல்லாத நன்னீர் இறால் வளர்ப்பினை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.