

மும்பை,
மும்பை பைகுல்லாவை சேர்ந்தவர் அகில் (வயது56). இவரது மகன் ஷேகானாஸ் (33). இவர் வேலையின்றி வீட்டிலேயே இருந்து வந்தார். குடும்ப செலவுக்கு பணம் தராததால் அகில் தனது மகன் மீது கோபம் அடைந்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்றும் தந்தை, மகன் இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் உண்டானது.
இதில் கடும் ஆத்திரம் அடைந்த ஷேகானாஸ், அங்கிருந்த கத்தியை எடுத்து தந்தை என்றும் பாராமல் அகிலின் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, அவர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த ஜே.ஜே. மார்க் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் ஷேகானாசை கைது செய்தனர்.