பஞ்சாயத்து தலைவரை கொன்றதாக கைதான 5 பேர் கோவை மத்திய சிறையில் அடைப்பு

பஞ்சாயத்து தலைவரை கொன்றதாக கைதான 5 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பஞ்சாயத்து தலைவரை கொன்றதாக கைதான 5 பேர் கோவை மத்திய சிறையில் அடைப்பு
Published on

அம்மாபேட்டை,

அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் சின்னத்தங்கம் என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் கடந்த 3-ந் தேதி வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள செல்லம்பாளையம் மாதிரி பள்ளி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்தன் என்பவருடைய தந்தை கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்தது என்றும், கூலிப்படையினரை வைத்து சம்பவம் அரங்கேறியதும் தெரிந்தது.

உடனே கூலிப்படையினரை பிடிக்க ஈரோடு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். இந்தநிலையில் கவுந்தப்பாடி அருகே காரில் வந்த கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது 3 பேர் பிடிப்பட்டார்கள். 2 பேர் தப்பி ஓடினார்கள். பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் எஞ்சிய 2 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்கள்.

போலீசாரின் விசாரணையில், அவர்கள் சென்னை பல்லாவரத்தில் வசித்துவரும் மதுரை மாவட்டம் பி.பி காலனியைச் சேர்ந்த சரவணன் (25), பல்லாவரத்தை சேர்ந்த பாலமுருகன் (30), சென்னை கிழக்கு அண்ணா நகரை சேர்ந்த ராஜேஷ் என்கிற சதீஷ்குமார் (27), மதுரை கரிமேடு அழகரடி வீதியைச் சேர்ந்த மிட்டாய் என்கிற சிவா (24), மதுரை காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த காட்னா என்கிற முத்துமாரி (25) ஆகியோர் என்பதும், இவர்கள் பணத்துக்காக குற்ற செயல்கள் புரியும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 5 பேரையும் நேற்று வெள்ளித்திருப்பூர் போலீசார் பலத்த பாதுகாப்புடன் பவானி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி ஜெயமணி 5 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 5 பேரும் கோவை கொண்டு செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த கொலை வழக்கில் கூலிப்படையை ஏவிய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அரவிந்தன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை வெள்ளித்திருப்பூர் மற்றும் அந்தியூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com