விவசாயிகளுக்காக மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் அம்பரீஷ் : சுமலதா ஆவேச பேச்சு

மக்கள் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். விவசாயிகளுக்காக மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் அம்பரீஷ் என்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு சுமலதா ஆவேசமாக கூறினார்.
விவசாயிகளுக்காக மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் அம்பரீஷ் : சுமலதா ஆவேச பேச்சு
Published on

பெங்களூரு,

நடிகை சுமலதா, மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று மண்டியா கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மஞ்சுஸ்ரீயிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் நடிகர் தர்ஷன், யஷ் உள்பட கன்னட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு மண்டியா சில்வர் ஜூப்ளி பூங்காவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகை சுமலதா கலந்துகொண்டு பேசியதாவது:

நான் இன்று (அதாவது நேற்று) வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனது கணவர் மண்டியாவுக்கு செய்ய வேண்டிய பணிகளில் இன்னும் சிலவற்றை விட்டுச் சென்றுள்ளார். அது என்ன என்பது எனக்கு தெரியும்.

அந்த பணிகளையும், அம்பரீசின் கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் இங்கு வெற்றி பெற்றுவிட்டால், வெளிநாட்டுக்கு சென்றுவிடுவேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

நான் ஏற்கனவே எல்லா நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன். நான் கன்னடம் உள்பட 5 மொழி படங்களில் நடித்துள்ளேன். எனக்கு அதில் இருந்து போதுமான அளவுக்கு புகழ் கிடைத்துள்ளது. அதனால் அரசியலுக்கு வந்து தான் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

மண்டியா மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். நான் மண்டியாவில் கிராமம், கிராமமாக சென்று மக்களிடம் கருத்துகளை கேட்டேன். அவர்கள், நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். அதை ஏற்று நான், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினேன்.

மக்களின் விருப்பப்படி நான் மண்டியா தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு கேட்டேன். ஆனால் கூட்டணி தர்மத்தை பின்பற்ற வேண்டும், டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர்.

அதனால் நான் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளேன். இன்று (நேற்று) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். நான் யார் என்று கேட்கிறார்கள். நான் அம்பரீசின் மனைவி. இந்த மண்ணின் மகள், மருமகள். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, என்னை பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தன. எனக்கு அவமானங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. நீங்களே (மக்கள்) பதில் சொல்லுங்கள்.

என் முன்னால் இமயமலை அளவுக்கு பெரிய சவால் உள்ளது. அந்த சவாலை உங்களின் ஆதரவுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை இந்த தொகுதியில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

அம்பரீஷ் இந்த தொகுதிக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். மண்டியா மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தது அவர் தான். பள்ளி கட்டிடங்களை கட்டி கொடுத்தார். கிராமங்களில் சமுதாய கூடங்களை கட்டினார். இப்படி பல்வேறு பணிகளை செய்துள்ளார். கிராமங்களுக்கு சென்று மக்களிடம் கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள்.

வேறு தொகுதியில் டிக்கெட் தருவதாகவும், எம்.எல்.சி. பதவி, மந்திரி பதவி தருவதாக என்னிடம் கூறினர். மண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று கூறினர். பதவி ஆசை இருந்திருந்தால், அதை ஏற்றுக்கொண்டு போய் இருப்பேன். இங்கு போட்டியிட்டு இருக்கமாட்டேன். மண்டியா தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன் உள்ளது. அதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.

எனக்கு மிரட்டல் விடுத்தனர். எங்கள் ஆதரவாளர்களை மிரட்டுகிறார்கள். உங்களின் அன்புக்கு முன்னால் அது எடுபடாது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் இந்த தொகுதி மக்களின் பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பேன். விவசாயிகளின் பிரச்சினைகளை பற்றி பேசுவேன்.

நடிகர்கள் தர்ஷன், யஷ் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதையும் விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் எனது குழந்தைகளை போன்றவர்கள். ஒரு தாய்க்கு ஆதரவாக குழந்தைகள் பிரசாரம் செய்வது தவறா?. உங்கள் (குமாரசாமி) மகனுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்யவில்லையா?.

அம்பரீஷ் விவசாயிகளுக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். விவசாயிகள் கஷ்டத்தில் இருந்தபோது, மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார்.

இவ்வாறு சுமலதா பேசினார்.

இதில் சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர்கள் தர்ஷன், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட கன்னட திரைத்துறையினர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com