தொழில் அதிபரை கடத்தி ரூ.2 கோடி பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

தொழில் அதிபரை கடத்தி ரூ.2 கோடி பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொழில் அதிபரை கடத்தி ரூ.2 கோடி பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா கிளியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 30). இவர் திருச்சி உறையூரில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த ஷேர் மார்க்கெட்டில் ரூ.55 ஆயிரம் செலுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு தினமும் ரூ.ஆயிரம் வீதம் 100 நாட்களுக்கும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலுத்தினால் தினமும் ரூ.2 ஆயிரம் வீதம் 100 நாட்களுக்கும் பணம் தருவதாக பலரிடம் கூறியதாக தெரிகிறது. இதனை நம்பிய பலர், முருகனின் ஷேர் மார்க்கெட்டில் பல கோடி ரூபாய் அளவுக்கு பணம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது.

முருகனின் ஷேர் மார்க்கெட்டில் வாடிக்கையாளராக உள்ள பெரம்பலூர் மாவட்டம் எசனை அருகே உள்ள கீழக்கரையை சேர்ந்த சுரேஷ்(32), எறையூரை சேர்ந்த மனோகரன்(40) ஆகியோர் கள்ளக்குறிச்சியில் தங்களுக்கு அறிமுகமான ஒருவரிடம் நிறைய பணம் உள்ளதாகவும், நேரில் சென்றால், அவரும் இந்த திட்டத்தில் இணைந்துகொள்வார் என முருகனிடம் கூறினார்களாம். இதனை நம்பிய முருகன் அவரிடம் தன்னை அழைத்து செல்லுமாறு தெரிவித்தாராம். அதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார்(30), ராகுல்(32) ஆகியோர் மூலம், முருகனை காரில் கடத்தி சென்று ரூ.1 கோடியே 67 லட்சத்தை முருகனின் வங்கி கணக்கிலிருந்து மனோகரன் வங்கி கணக்குக்கு ஆன்லைன் மூலம் மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார், ராகுல் ஆகியோர் முருகனிடம் பணம் கேட்டு மிரட்டி, அவரது வீட்டுக்கு ஆள் அனுப்பி ரூ.27 லட்சத்தை முருகன் மனைவியிடம் வாங்கிக்கொண்ட பின் முருகனை விடுவித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து முருகன், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முருகனை கடத்தி பணம் பறித்த சுரேஷ், விஜயகுமார், ராகுல் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மனோகரனை போலீசார் நேற்று கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com