பெரம்பலூர் சங்குப்பேட்டையில் தலை துண்டாகி இறந்து கிடந்த 7 ஆடுகள் போலீசார் விசாரணை

பெரம்பலூர் சங்குப்பேட்டையில் 7 ஆடுகள் தலை துண்டான நிலையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் சங்குப்பேட்டையில் தலை துண்டாகி இறந்து கிடந்த 7 ஆடுகள் போலீசார் விசாரணை
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட சங்குப்பேட்டை அழகிரி தெருவை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி புஷ்பம்(வயது 70). இவர் தனது கணவர் சதாசிவம் இறந்து விட்டதால் தனியாக வசித்து வருகிறார். மேலும் ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மேய்ச்சல் முடிந்து தனது 22 ஆடுகளையும் புஷ்பம் தனது வீட்டின் முன்பு கட்டி போட்டு விட்டு தூங்க சென்றார்.

இந்நிலையில் நேற்று காலையில் புஷ்பம் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த 22 ஆடுகளில் 12 ஆடுகளை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் 10 ஆடுகளில் 6 ஆடுகளின் உடல்களில் பல்வேறு இடங்களில் கத்தி கீறல்கள் இருந்தன. இதுகுறித்து புஷ்பம் தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் காணாமல் போன 12 ஆடுகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. அழகிரி தெருவில் உள்ள நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பெண்கள் கழிப்பறை அருகே ஒரு ஆடும், அந்தப்பகுதியில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் ஒரு ஆடும், கிணற்றின் உள்ளே ஒரு ஆடும், ஏரிக்கரையோரம் 2 ஆடுகளும் என அந்த தெருவை சுற்றி மொத்தம் 7 ஆடுகள் தலை துண்டான நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதனை பார்த்த புஷ்பம் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

காணாமல் போன மீதம் 5 ஆடுகளின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் மக்களிடையே காட்டு தீ போல் பரவியது. இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது பெண்கள் கழிப்பறை சுவற்றில் ஆட்டின் ரத்தக் கறையில் ஆங்கிலத்தில் புல்கி த மாஸ் என்று எழுதப்பட்டிருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்குப்பேட்டையில் யாருடன் முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் இந்த செயலில் ஈடுபட்டனரா? என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தனது முதற்கட்ட விசாரணை தொடங்கி, இந்த செயலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

காணாமல் போன மற்ற 5 ஆடுகளையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com