கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
Published on

சென்னை,

சென்னையில் கூட்டம் அதிகமாக இருக்கும் இடமான, தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம் தாணா தெரு மற்றும் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அங்குள்ள பொதுமக்கள், வியாபாரிகள் பாதுகாப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்டவைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது முககவசம் அணியாமல் இருந்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, ரூ.200 அபராதம் வசூலித்தார். மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு உடனடி அபராதம் வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சென்னையை தொடர்ந்து கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருகிறவர்கள் 72 மணி நேரத்துக்குள் பரிசோதனை செய்து அதன் முடிவை பயணத்தின்போது கொண்டு வரவேண்டும். அந்த முடிவில் பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே பயணிகள் வெளியே அனுமதிக்கப்படுவர். ஆனால், இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு, தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவ்வாறு இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏதேனும் அறிகுறி இருந்தால், அந்த பயணி தனிமைபடுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்படுவார். சென்னையில் தற்போது 4 ஆயிரம் படுக்கைகளுடன் கொரோனா கண்காணிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அச்சப்படத்தேவையில்லை. ஆனால் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

மராட்டியம், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நபர்களிடம் இருந்து இதுவரை ரூ.4 கோடியே 5 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com