

மும்பை,
மும்பை கோரேகாவில் உள்ள நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் துக்காராம்(வயது65). இவர் சம்பவத்தன்று மாலை 7 மணியளவில் தாதர் ரெயில் நிலையம் 1-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டு இருந்தார். திடீரென அவர் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழுந்தார். அப்போது, அங்கு இருந்த ரெயில்வே போலீஸ்காரர் மகாதேவ்(35) என்பவர் ஓடிவந்தார். அவர் நேரத்தை வீணாக்காமல் சுமார் கி.மீ. தொலைவில் நின்ற ஆம்புலன்சுக்கு முதியவரை தோளில் தூக்கிச்சென்றார். மற்ற ரெயில்வே போலீசார் ஆம்புலன்சை தயாராக நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து அவர் உடனடியாக சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. எனினும் உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதால் அவர் காப்பாற்றப்பட்டார்.
இது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர் கூறுகையில், இன்னும் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக வந்து இருந்தால் முதியவரை காப்பாற்றி இருக்க முடியாது, என்றார்.
துரிதமாக செயல்பட்டு முதியவரின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்காரர் மகாதேவை ரெயில்வே மூத்த அதிகாரிகள் மற்றும் பயணிகள் வெகுவாக பாராட்டினர்.
ரெயில்வே போலீஸ்காரர் மகாதேவ் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.