திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை

திண்டுக்கல்லில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அதில் திண்டுக்கல் ஜி.டி.என். சாலையோரத்தில் இருந்த ஒரு மரம் காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும். கடந்த ஆண்டு ஜூன் 20-ந்தேதிக்கு மேல் தான் தென்மேற்கு பருவமழை பெய்தது.

ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மாத இறுதியில் இருந்தே மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பகல் முழுவதும் சூரியன் சுட்டெரித்தாலும், வெப்பத்தின் தாக்கத்தை விரட்டும் வகையில் மாலையில் அவ்வப்போது மழை பெய்தது. சில நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அதன்படி நேற்றும் திண்டுக்கல்லில் பகல் முழுவதும் சூரியன் சுட்டெரித்தது. ஆனால் மாலையில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் சூழ்ந்தன. பின்னர் மாலை 4.30 மணி அளவில் சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.

சுமார் 2 மணி நேரம் இந்த மழை நீடித்தது. அதன் பின்னர் சாரல் மழையாக பெய்தது. பலத்த மழை காரணமாக நாகல்நகர் சாலை, ரெயில் நிலைய சாலை, தாடிக்கொம்பு ரோடு, ஜி.டி.என்.சாலை என நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

கொட்டும் மழையில் சிலர் நனைந்தபடி வாகனங்களில் வீடுகளுக்கு சென்றனர்.

மேலும் காற்றின் வேகமும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

இதனால் திண்டுக்கல் ஜி.டி.என். சாலையோரத்தில் இருந்த ஒரு மரம் காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com