கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை: கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்வு

கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் அணையில் இருந்து கோமுகி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை: கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்வு
Published on

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. இந்த அணைக்கு கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக கல்படை, பொட்டியம் ஆறுகள் வழியாக தண்ணீர் வரும். அவ்வாறு வரும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தேக்கி வைப்பார்கள். மேலும் இந்த அணையின் பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால்கள் வழியாக திறக்கப்படும் தண்ணீர் மூலம் 10 ஆயிரத்து 860 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்வராயன் மலையில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கோமுகி அணை தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனிடையே கடந்த சில வாரங்களாக கல்வராயன்மலையில் பெய்த தொடர் மழையால் வறண்டு கிடந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 43 அடியை எட்டியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு 1 மணி வரை கல்வராயன்மலையில் பலத்த மழை பெய்ததால் கல்படை, பொட்டியம் ஆறுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்தது. தொடர் நீர்வரத்து காரணமாக கோமுகி அணையின் நீர்மட்டம் நள்ளிரவில் 44 அடியாக உயர்ந்தது. இதற்கிடையே கல்வராயன்மலையில் மழை குறைந்ததால் ஆறுகள் வழியாக வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதையறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி தேக்கி வைத்ததோடு, அணைக்கு வரும் ஆயிரம் கனஅடி நீரை கோமுகி ஆற்றில் திறந்து விட்டுள்ளனர்.

இதுகுறித்து கோமுகி பாசன விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த சில வாரங்களாக கல்வராயன்மலையில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. இதனால், அணை கடல் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணை நிரம்பியதாலும் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள என்னை போன்ற விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com