லால்குடி பகுதியில் பலத்த மழை: பங்குனி வாய்க்கால் தடுப்பணை உடையும் அபாயம் நடவடிக்கை எடுக்க - பொதுமக்கள் கோரிக்கை

பலத்த மழை காரணமாக லால்குடியை அடுத்த திருமங்கலத்தில் உள்ள பங்குனி வாய்க்கால் தடுப்பணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லால்குடி பகுதியில் பலத்த மழை: பங்குனி வாய்க்கால் தடுப்பணை உடையும் அபாயம் நடவடிக்கை எடுக்க - பொதுமக்கள் கோரிக்கை
Published on

லால்குடி,

திருச்சி மாவட்டம், முக்கொம்பில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வாத்தலை, மண்ணச்சநல்லூர், சமயபுரம், வாளாடி, நகர், மாந்துரை வழியாக லால்குடியை அடுத்த திருமங்கலத்தில் உள்ள பங்குனி வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை வந்தடைகிறது. இங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.

மேலும், முசிறி வடகரை வாய்க்காலில் இருந்தும், துறையூரை அடுத்த கொல்லிமலையில் இருந்து பருவமழை காலங்களில் உப்பாறு வழியாக வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு பங்குனியாறு, கூழையாறு வழியாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த தடுப்பணை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பணையின் கீழ் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீர்கசிவு ஏற்பட்டதால் மண் அரிக்கப்பட்டு திட்டுகள் சரிந்து காணப்பட்டது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இந்த அணையை உயர்த்தி புதிதாக கட்ட வேண்டும் என விவசாயிகள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று லால்குடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியதுடன் எஞ்சிய தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

பருவ மழை தொடங்கி உள்ளதால் முசிறி, கொல்லிமலையில் இருந்து வரும் தண்ணீர் தடுப்பணையை அடையும்போது தடுப்பணை உடையும் அபாய நிலை ஏற்படும்.

இந்த தடுப்பணை உடைந்தால் குறுவை சாகுபடிக்கு பயிரிடப்பட்டுள்ள திருமங்கலம், பூவாளூர், காட்டூர், திண்ணியம், செம்பரை, திண்ணக்குளம், நத்தமாங்குடி, நத்தம் உள்ளிட்ட ஊர்களில் விவசாயம் செய்யப்பட்டுள்ள விளைநிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, இந்த தடுப்பணையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com