மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.பஞ்சலிங்க அருவியில் குளிக்க 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
Published on

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகின்ற கொட்டைஆறு, பாரப்பட்டிஆறு, வண்டிஆறு, குருமலைஆறு, கிழவிபட்டிஆறு, உப்புமண்ணம்பட்டிஆறு நீராதாரமாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும் போது ஆறுகளில் நீர்வரத்து ஏற்படுகிறது. இந்த ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு விதமாக பிரிந்து ஓடினாலும் இறுதியில் பஞ்சலிங்கஅருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது. இதனால் பஞ்சலிங்கஅருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுமார் 6 மாத காலத்திற்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது. வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தானாகவே கரைந்து விடுகிறது.

இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் ஒருவித நறுமணத்தையும் அளிக்கிறது. அருவியில் குளிப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மனஅழுத்தமும் குறைந்து விடுகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல்மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது நீர்வரத்து கூடுவதும் பின்பு குறைவதுமாக இருந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை யொட்டி நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது. அந்த வெள்ளம் அடிவாரப்பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் குன்று, சப்தகன்னிமார் கோவிலையும் சூழ்ந்தது. கோவிலை சூழ்ந்த வெள்ளம் திருமூர்த்தி அணையை நோக்கி வேகமாக பாய்கிறது.

இதன் காரணமாக பக்தர்கள் மும்மூர்த்திகளை வலம்வந்து சாமிதரிசனம் செய்ய முடியாத சூழல் நிலவியது. இதனால் கோவிலில் பூஜைகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. உண்டியல்கள் முன்னெச்சரிக்கையாக பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டப்பட்டிருந்ததால் அதில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கைகள் முழுமையாக காப்பாற்றப்பட்டது. நேற்று அதிகாலையில் தொடங்கிய வெள்ளப்பெருக்கு மதியம் வரையிலும் நீடித்தது.

மேலும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தகவல் சுற்றுப்புற கிராமங்களில் காட்டுத்தீயாக பரவியது. அதைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் திருமூர்த்திமலையில் குவிந்தனர். கோவிலை சுற்றி பாலாற்று வெள்ளம் செல்வதை புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் உற்சாகத்தோடு பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர் ஆர்வ மிகுதியின் காரணமாக பாலாற்றை கடந்து பஞ்சலிங்க அருவிக்கு செல்ல முற்பட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கோவில் பணியாளர்கள் தடுத்து அப்புறப்படுத்தினர். கோவில் மூலஸ்தானத்தை சுற்றி பாலாற்று வெள்ளம் ஓடியதால் பக்தர்கள் அங்கு சாமி தரிசனத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதை தொடர்ந்து நேற்று 3-வது நாளாக பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com