விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை: சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் போது திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி இறந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை: சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு
Published on

விழுப்புரம்,

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் தொடர்ச்சியாக ஓரிரு நாட்கள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மாலை பல இடங்களில் சாரல் மழை பெய்தது. இரவு 11.30 மணியளவில் விழுப்புரம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான காணை, பெரும்பாக்கம், கோலியனூர், வளவனூர், நன்னாடு, தோகைப்பாடி, கண்டமானடி, பிடாகம், கல்பட்டு, சிந்தாமணி, அய்யூர்அகரம், கப்பியாம்புலியூர், குச்சிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் கனமழையாக கொட்டிய நிலையில், பின்னர் சாரல் மழையாக காலை 5 மணி வரைக்கும் நீடித்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை, திரு.வி.க.சாலை உள்ளிட்ட இடங்களில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. விழுப்புரம் கம்பன் நகர், சுதாகர் நகர், வீனஸ் நகர், கணேஷ்நகர், கே.கே.நகர், மணிநகர், சித்தேரிக்கரை, சிந்தாமணி, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது.

மேலும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை மின் மோட்டார் மூலம் அந்த தண்ணீரை நகராட்சி ஊழியர்கள் வெளியேற்றிய பிறகு போக்குவரத்து சீரானது.

அதேபோல் விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் நகராட்சி பள்ளி மைதானத்தை ஒட்டிச்செல்லும் கோலியனூரான் வாய்க்காலும் நிரம்பி அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பலத்த மழையால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. உடனே நகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மின்மோட்டார் மூலம் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினர்.

விழுப்புரம் பாகர்ஷா வீதி, எம்.ஜி.சாலையில் செயல்பட்டு வந்த சில்லரை காய்கறி கடைகள், தற்போது தற்காலிகமாக நகராட்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பலத்த மழை காரணமாக அந்த கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து காய்கறிகள் சேதமடைந்தது. இதனால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அவர்கள் மிகவும் கவலையடைந்தனர்.

மேலும் விழுப்புரம் நகரம் முழுவதும் நள்ளிரவு 12 மணியளவில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது. விழுப்புரம் அருகே காணை சுற்றுவட்டாரத்தில் பெய்த பலத்த மழையினால் கொத்தமங்கலத்தில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 10 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து தடைபட்டது.

மேலும் திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர், கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாலையில் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக கோலியனூரில் 40 மி.மீ. பதிவாகியுள்ளது.

இதனிடையே திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி சரோஜா (வயது 70) என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த சரோஜா, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இவருடைய மகன் இளங்கோவனுக்கு தலை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com